பேட்டரி வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுநரான பாலா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலா திருச்சியில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு முசிறியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்களை இறக்கி விட்ட பிறகு பாலா மீண்டும் காரில் குளித்தலை வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலா உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் காரின் பேட்டரி வெடித்து கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.