லாரியின் டேங்க் வெடித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முதலைபட்டிபுதூர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று டீசல் ஏற்றி சொல்லும் டேங்கர் லாரி ஒன்று வெல்டிங் வேலைக்காக பெரியசாமியின் பட்டறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து லாரியின் வால்வை பொருத்துவதற்காக பெரியசாமி வெல்டிங் வைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது லாரி டேங்க் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் பெரியசாமியின் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் வெடித்து சிதறிய லாரி டீசல் ஏற்றி செல்லும் லாரி என்பதால் அதன் டேங்கை தண்ணீர் ஊற்றி முறையாக சுத்தம் செய்யாத காரணத்தினால் வால்வை சரிசெய்ய வெல்டிங் வைக்கும் போது வெடித்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.