தமிழ் ஆசிரியரிடம் கவிஞர் வைரமுத்துவுக்கு போன் போட்டு கொடுத்து பேச வைத்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது கவிஞர் வைரமுத்து எழுதியிருந்த ஓ என் சமகால தோழர்களே என்ற கவிதை தொகுப்பை இரண்டு கண்கள் தெரியாத தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்து வந்தார். இதனை மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் கவனித்தார்.
அதன் பிறகு செல்போனில் கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு தமிழ் ஆசிரியரிடம் பேச வைத்தார். அவரிடம் “இரண்டு கண்கள் இல்லை என்றாலும் 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்” என ஆசிரியருக்கு வைரமுத்து நம்பிக்கை கொடுத்தார். மேலும் வைரமுத்துவிடம் அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை ஆடியோ வடிவில் முழுமையாக கேட்டதாகவும், அவரின் பாடல்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்று ஆசிரியை தமிழ்ச்செல்வி தெரிவித்தார். இதை கேட்ட வைரமுத்து அவருக்கு நன்றி தெரிவித்து அவரது பணியை தொடர வாழ்த்தினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.