நாகையில் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் சாக்காடு பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தாணிக்கோட்டம் கடை தெருவில் அன்பழகன் நின்று கொண்டிருந்தார். அப்போது தகடூர் செட்டியக்காடு பகுதியில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் கார்த்திக், அவரது நண்பர் பீட்டரும் அங்கு வந்தனர். அப்போது அன்பழகனை, கார்த்திக் திடீரென அருகில் உள்ள கடையில் இருந்த கத்திரிக்கோலை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து பீட்டரும், கார்த்திக்கும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அன்பழகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீட்டர், கார்த்திக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அன்பழகன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் அவர்கள் இருவரும் பிடிபட்டால் தான் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.