பீகாரின் மோதிஹரி பகுதியில் உள்ள ரஹ்மானிய மருத்துவ மையத்திற்கு பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றை கொண்டு சென்று உள்ளனர். அதன் வயிற்றில் வீக்கம் காணப்படுகிறது என டாக்டரிடம் கூறியுள்ளனர். இதனால், அந்த குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். வீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அறிய, குழந்தையை டாக்டர் தப்ரீஸ் ஆசிஸ் பரிசோதனை செய்துள்ளார். இதற்காக சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதுபற்றி டாக்டர் ஆசிஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, அரிய வகையான இயற்கையில் நடக்க கூடிய நிகழ்வு என கூறியுள்ளார். இதனை கருவுக்குள் கரு என கூறுகின்றனர். 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படுகிறது. அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உள்ளது. அதன்பின்னர், குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.