காவல் துறையினரிடமிருந்தே லஞ்சம் வாங்கும் தலைவர்கள் கட்சியில் இருப்பதாக பாரதிய ஜனதா எம்பி வருண் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தான் ஊழல் ஏதும் செய்யவில்லை என்று கூறியவர் ஆனால் கட்சியில் உள்ள பல தலைவர்கள் காவல்துறையினர்,சுரங்கதுரை அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அதற்கு செவி கொடுப்பது அரசின் கடமை. அதற்க்குத்தான் என்னைப்போன்ற மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். நான் யாரையும் எப்போதும் ஏமாற்றியது கிடையாது. ஒரு ரூபாயாவது லஞ்சம் பெற்றேன் என்று கூற முடியுமா? ஆனால் கட்சியில் பல தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நான் சொல்லப் போவதில்லை.
ஏன் என்றால் அது உங்களுக்கு தெரியும். காவலர்கள், சுரங்கத்துறையினர் உள்ளிட்டோரிடம் அவர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். மக்கள் அரசுக்கு அதிகாரத்தை வழங்கி இருப்பது பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மட்டுமே தவிர அரசியல்வாதிகள் தன்னை தானே உயர்த்திக் கொள்ள அல்ல” என்று வருண் காந்தி பேசினார். முன்னதாக வேளாண் விளை பொருளை 15 நாட்களாக விற்க முடியாததால் மனமுடைந்து உத்தரப் பிரதேச விவசாய சமோத் சிங் என்பவர் தானியத்தை தீ வைத்து கொளுத்திய காட்சியை ட்விட்டரில் வருண் காந்தி பகிர்ந்திருந்தார்.
விவசாயிகளின் இதுபோன்ற மனமுடைந்த நிலை குறித்து தனது டுவிட்டரில் வருண்காந்தி கவலை தெரிவித்திருந்தார். அரசின் விவசாயக் கொள்கை களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வருண் கோரியிருந்தார். மத்திய அரசு தனது விவசாய கொள்கைகளில் மறுபரிசீலனை செய்து அவர்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று பாரதீய ஜனதா எம்பி வருண்காந்தி போர்க்கொடி தூக்கி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.