பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகில் இருக்கும் மாதவலாயம் பகுதியில் அப்துல் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செண்பகராமன்புதூர் அருகில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவியது. இதுகுறித்து பண்ணையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் முகமது உசேனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது உசேன் உடனே பண்ணைக்கு வந்து கோழிகளை மீட்க முயற்சி செய்துள்ளார். அனாலும் தீயை அணைக்க முடியாததால் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உடல் கருகி உயிரிழந்தன. இதுகுறித்து முகமது உசேன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.