3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் சமமான வளர்ச்சி பெறும் நோக்கில் 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும்.
கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும். தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் தரப்பிலும், கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆந்திர அரசின் முடிவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்திலும், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். தனது தலைமையிலான அரசு 3 தலைநகரங்களை உருவாக்க முடிவிலிருந்து பின்வாங்குவதாக கூறினார். இதனையடுத்து தவறுகள் இல்லாத புதிய மசோதா விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.