நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்தி வைக்கவோ முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நீட் தேர்வு நடக்கும். கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 12ல் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.