திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க ஓலைப்பளையம் கிழக்கு காடுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து இரவில் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த 32 லட்சம் ரூபாய் மற்றும் 60 பவுன் நகைகள் திருடுபோய் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விமல் உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் குற்றபிரிவு காவல்துறையினர் விமல் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்து இருந்ததும், விமல் வீட்டிற்கு அருகே உள்ள ஜெயராம் என்பவர் வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது. ஆனால் அவர் வீட்டில் பணம் எதுவும் சிக்காததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் திட்டம்போட்டு திருடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.