பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து திண்டுக்கல் பட்டமளிப்பு விழாவில், இசைஞானி இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்பதே தமது ஆட்சியின் கொள்கை, சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி. கடந்தாண்டு 1 லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.
மேலும் சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளியாக தமிழ்நாடு இருந்தது, இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர், கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி 200 % அதிகரித்துள்ளது, கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 % அதிகரித்துள்ளது. கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.
அதன்பின் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக மதுரைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து காரில் மதுரைக்கு பயணம் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்.” என ட்விட் செய்துள்ளார்.
வணக்கம் தமிழ்நாடு!
திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன். pic.twitter.com/sRUvYFZv29
— Narendra Modi (@narendramodi) November 11, 2022