தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்திகுளத்துப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கண்ணனுக்கும் அவரது மனைவி உமாராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உமாராணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமாராணி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் உமாராணி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமாராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து உமாராணியின் சகோதரனான பத்மநாதன் என்பவர் தனது தங்கையை வரதட்சணை கேட்டு கண்ணன் கொடுமை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உமாராணி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.