திண்டுக்கல்லில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின் அந்த காரில் சோதனை மேற்கொண்டபோது பெட்டி, பெட்டியாக ஆடைகள் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பூருக்கு ஆடை விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த ஆடைகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த ஆடைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.