திண்டுக்கல் நகரின் மையத்தில் வரலாற்று பின்னணி கொண்ட மலைக் கோட்டை அமைந்துள்ளது. திண்டுக்கல் என்றதும் அனைவருக்கும் நிலைக்கு வருவது பூட்டு தான். இங்கு தயாரிக்கப்படும் தனிச் சிறப்பு பெற்ற பூட்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. பூட்டு மட்டுமின்றி திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில் பூ விளைச்சலும் அதிகம். 1952 இல் தொடங்கி இதுவரை 15 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக 7 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதும் முதல் வெற்றியை தந்த தொகுதியாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இருந்தாலும் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக இதுவரை 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக ஒரு முறை வென்றுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக வளத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் 2,75,979 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கலில் பூக்களை பாதுகாத்து வைப்பதற்காக இப்பகுதி குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வரும் நிலையில் அரசு தங்கள் கோரிக்கையை பரிசீலிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் திண்டுக்கல் தொகுதியில் விவசாயம் பிரதான வாழ்வாதாரங்களில் ஒன்றாக இருப்பதால் காய்கறி மற்றும் பூக்கடைகள் உடன் ஒருங்கிணைந்த மார்க்கெட்டை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது. பர்மா காலனி, அண்ணாநகர், சவேரியார், கக்கன் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நீண்ட காலமாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்கபடாமல் உள்ளன.
பர்மா காலனி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் மக்கள் வீடுகளின் அருகே குழி தோண்டி அதில் கழிவு நீரை தேக்கி பின்னர் வெளியே எடுத்து ஊற்ற வேண்டிய அவலம் நீடிக்கிறது. எந்தவிதமான அடிப்படை வசதிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட வில்லை என்பதும், குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது என்பதும் தொகுதி மக்களின் குற்றச்சாட்டு. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியிலேயே மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது.
பால கிருஷ்ணாபுரத்தில் உள்ள 3 ரயில்வே கெட்டுகளையும் கடந்து செல்வதால் கால விரயம் ஏற்படுவதால் ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை. மேம்பாலத்திற்கான பணிகள் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் கூட மழையால் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சர்ச்சை பேச்சுகளால் மட்டுமே புகழ்பெற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் திண்டுக்கல் தொகுதி பிரச்சனையில் நிறைந்து காணப்படுகிறது. அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை என்று வேதனையுடன் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர் தொகுதி மக்கள்.