திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து சாமி சிலை செய்வதற்காக கொடுக்கப்பட்டது. அதன்பின் அந்த பிடி மண் சிறுகுடி மந்தை பகுதியில் உள்ள சவுக்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் சர்வ அலங்காரத்தில் இருந்த அம்மனை ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
அதன்பின் முத்தாலம்மன் மேளதாளங்களுடன் கோவில் முன்பு உள்ள மந்தைக்கு நகர்வலம் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவிளக்கு, ஆரத்தி போன்றவை அம்மனுக்கு எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிடாவெட்டு நடைபெற்றது. பின்னர் மாலையில் அம்மன் பூஞ்சோலைக்கு சென்றது. இந்த விழாவிற்கான முன் ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில்தாரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.