திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சந்திரசேகர சுவாமி பவளக்கால் விமானத்தில் வீதி உலா வந்து அதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதைத்தொடர்ந்து காலை 9.30மணிக்கு மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று தேர் இடதுபுறமாக திரும்பியது. உடனே பொக்லைன் இயந்திரம் அங்கு கொண்டு வரப்பட்டு தேரை இயல்பு நிலைக்கு கொண்டுவர செய்தனர்.
அதன் பிறகு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றார்கள். தேர் நேரு வீதியில் சென்று கொண்டிருக்கும்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின் தேர் காமாட்சி அம்மன் கோவில் வீதி, நேரு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி வீதி வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதற்கு முன் தேர் நிலையில் இருந்து புறப்படும் போது அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் அர்ஜுணன், சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு வந்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் இன்று சனிக்கிழமை தீர்த்தவாரியும், நாளை ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவம் நடைபெற இருக்கிறது. இந்த விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் தினேஷ், செயல் அலுவலர் ஸ்ரீ கன்யா, திருக்கோவில் ராதா குருக்கள், பணியாளர்கள், அப்பர் சுவாமி, உழவாரப்பணி குழு உட்பட பலர் செய்தார்கள்.