தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார். எனவே இந்த திட்டத்தை காலதாமதமின்றி விரைவில் அமல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி புரியும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதை அடுத்து தினக்கூலி அடிப்படையில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு, தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் புதிய ஊழியர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நியமிக்க திட்டமிட்டிருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசானது இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 400க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.