இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மேக்ஸ் மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்த மருத்துவர் விவேக் ராய் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அவருடைய தற்கொலை முடிவிற்கு மருத்துவமனைகளில் தினசரி கொரோனாவால் ஏற்படும் உயிர் பலிகளால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் கூறும்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்த மருத்துவர் விவேக் ராய், நூற்றுக்கணக்கான நோயாளிகளை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்றியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுடைய மன அழுத்தம் காரணமாக உணர்வுபூர்வ முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.