பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா (PMSMY0 ) திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ .1.80 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ரூ .3000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது பணிப்பெண்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 கோடி மக்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள்.
உங்கள் மாத வருமானம் ரூ.15000 க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் நாற்பது வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், இத்திட்டத்தில் சேர்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் நபர்கள் அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அல்லது ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC) போன்றவற்றில் பயன் அடைபவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு வயதினருக்கு ஏற்றாற்போல் முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 18 வயதினராக இருந்தால், நீங்கள் மாதந்தோறும் 55 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், உங்களுக்கு 29 வயது என்றால் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் மற்றும் உங்களுக்கு 40 வயது என்றால் 40 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு முன்பு பயனாளி இறந்துவிட்டால், ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் அவரது மனைவிக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர ஊழியர் பொது வருங்கால நிதி அமைப்பின் (EPFO) இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகலாம். இது தவிர, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), மாநில ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐசி), இபிஎஃப்ஒ அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் சென்று விண்ணப்பங்களைச் செய்யலாம்.