அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். அவர் பொதுக்குழு கூட்டத்தின் போது பேசியதாவது, திமுகவினர் அண்ணாவின் பெயரையும், புகழையும் குப்பையில் போட்டு விட்டனர். தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காக கலைஞர் திமுகவை பயன்படுத்தினார். கலைஞரும் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலினும் மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை.
அதிமுகவின் 10 ஆண்டுகால பல நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வருமானத்தை தன்னுடைய கஜானாவிற்கு திருப்பும் வேலையில் திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தினந்தோறும் 4 சூட்டிங் நடக்கிறது. எந்தத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. காலை சிற்றுண்டி திட்டத்தை ஆரம்பித்த திமுக அரசு அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டியை வழங்க வேண்டும்.
தற்போது முதல்வராக இருப்பவரின் ஆட்சி விளம்பர ஆட்சி. விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரமாகாது. எழுதாத பேனா மையில்லாத பேனாவிற்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிறார்கள். திமுக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஆவின் பாலின் தரம் தற்போது குறைந்து விட்டது. அனைத்து பொருட்களிலும் கலப்படம் அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.