Categories
மாநில செய்திகள்

தினேஷ் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது… பேனர் வைக்காதீங்க… முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ரஹீம் லே அவுட் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஏகாம்பரம்-  விஜயலட்சுமி..  இந்த தம்பதியரின் கடைசி மகன் தினேஷ்.. 13 வயது ஆகிறது.. 9ஆம் வகுப்பு பயின்று வரும் தினேஷ் கடந்த 20ஆம் தேதி திமுக பிரமுகரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், “பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் – வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற எனது வேண்டுகோளை கழகத்தினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்”

கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது.

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத – கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்! என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்..

Categories

Tech |