திபெத்தில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மத அடக்குமுறைகள் பற்றி கவலை தெரிவிக்கும் அடிப்படையில் உலகத் தலைவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், “திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8-வது மாநாடு” அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று துவங்கியது. இந்த மாநாடு திபெத் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வலுப்படுத்தவும், ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவற்றில் 26 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், திபெத்திய நாடாளுமன்றம் உட்பட நேரிலும், காணொலி மூலமும் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி திபெத் விவகாரம் தொடர்பாக தன் கருத்துக்களை கூறினார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது “திபெத்தின் உண்மையான சுயாட்சியை முன்னெடுப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்த மன்றம் முக்கியமானது ஆகும். பல வருடங்களாக சீன அரசாங்கம் திபெத்தில் மனித உரிமைகள் மீது ஆபத்தான தாக்குதலை நடத்தி வருகிறது. திபெத்திய சுயாட்சி, அடையாளம் (அல்லது) நம்பிக்கை போன்றவற்றில் சீனாவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரே குரலில் குரல்கொடுப்பதும், திபெத்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டிய தார்மீக கடமையும் ஒட்டுமொத்த உலகிற்கு இருக்கிறது.
இதனிடையில் சீனாவுடனான வணிக உறவுகளின் காரணமாக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாம் பேசவில்லை எனில், வேறு எங்கும் மனித உரிமைகளுக்கு எதிராக பேசுவதற்கான அனைத்து தார்மீக அதிகாரத்தையும் இழக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு திபெத் மீதான சீன படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்குப் பின், திபெத்திற்கான தனி அடையாளத்தை மீட்டெடுப்பதில் இந்தியா ஆற்றிய அடித்தளபங்கை கௌரவிக்கும் அடிப்படையில் முதல் உலக பிரதிநிதிகளின் திபெத்மாநாடு புதுடெல்லியில் கடந்த 1994ஆம் வருடம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் திபெத் விவகாரத்தில் பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வுகாண தலாய் லாமா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை விரைவில் துவங்குவதற்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளில் பரிசீலிப்பார்கள் என்று தெரிகிறது.