தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் பெயர் பலகை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் இன்று காலை சூறையாடினர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனையடுத்து அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி பாஜக தலைவர் முருகன் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுரவாயலில் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுகவினரின் வீடியோ காட்சிகளை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறப் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.