அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் பேசியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டு காலமாக அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும் இது நிலையான வெற்றி கிடையாது. அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவரது வழியில் ஒருங்கிணைப்பாளர்களும் செயல்பட்டனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டுகளுக்குள்ளாகவே அதிமுகவினர் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகின்றார்கள். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் திமுகவின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது, எனவும் தற்போது திமுகவினர் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
எனவே இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து உழைத்தால் வரக்கூடிய லோக்சபா தேர்தலில் நமக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு அதிமுக தான் ஆளும் கட்சியாக இருக்கும் என அவர் பேசியுள்ளார்.