தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திமுக அரசு மத்திய அரசின் பெயர் மற்றும் திட்டங்களின் ஸ்டிக்கரை மாற்றி மக்களுக்கு வழங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. நீட் பற்றி அவர்கள் பேசும் பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இனியும் அவர்கள் பொய் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது என்பதற்கு நேற்றைக்கு முன் நடைபெற்ற விவசாய பந்த் தான் ஒரு சாட்சி என்று கூறியுள்ளார்.