திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார் என்று கேள்வியை எழுந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கான காரணமாக 100 நாள் வேலைத்திட்டத்தை குறிப்பிடுகிறார். இது குறித்து அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் எனது பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறுவயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். உங்களை அம்மா என்று அழைப்பதில் பேருவகை கொள்கிறேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் உங்களை சுப்பக்கா என்று பாசத்தோடு அழைத்து அந்த காலகட்டத்தில் உங்களின் அருமை எனக்கு புரியவில்லை. ஆனால் இப்போதுதான் நீங்கள் எப்பேர்ப்பட்ட கொள்கை உறுதி கொண்ட பெண் மகள் என்பதையும், எவ்வளவு போற்றுதலுக்குரியவர் என்பதை உணர்கிறேன். உங்களை இழந்ததற்கு திமுக தான் வருந்தி திருந்த வேண்டும்.
அதனை தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற காரணத்தாலே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். இந்த வேலை திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவை சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். எனவே எந்த காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதே தெரிவித்துக் கொள்கின்றேன். இதனையடுத்து திமுகவை விட்டு வெளியேறி விட்டதால் தனி ஒரு பெண்மகள் என்று தயங்காமல் உங்கள் கருத்துக்களை துணியுடன் எடுத்து கூறுங்கள். பாஜகவை விமர்சிக்க திமுகவில் இருப்பது தடையாக உள்ளது. ஆனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்று உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன். உங்களை போன்ற தாய்மார்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதினால் தான் இன உணர்வும், மான உணர்வும் மங்காது மலர்கிறது. மேலும் இயக்கத்தில் இருந்த போதும் தனித்த பேராற்றல் நீங்கள் தனித்து இருந்தாலும் மாபெரும் இயக்கம் நீங்கள். உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களை கொண்டாட காத்து உள்ளார்கள். உங்களுடைய மகன் என்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்களுடைய தன்மானம் உணர்வுக்கும் தமிழ் உணர்வுக்கும் நான் தலை வணங்குகிறேன் என்று அதில் தெரிவித்து இருந்தார்.