அரசின் மீது ஊழல் குற்றசாட்டு இருக்கிறது என சொல்லும் திமுக நீதிமன்றம் செல்லாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் ஆளுநரிடம் மீண்டும் ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை இல்லை. இதை நீதிமன்றத்திற்கு எடுத்துட்டு போனா இது நிக்காது. இதே போல பல வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார்கள். திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற அர்த்தத்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கோயபல்ஸ் பிரச்சாரம் எந்த நாளிலும் எடுபடாது. தவறு செய்திருந்தால் நீதிமன்றத்திற்கு போகலாம். சட்டமன்றம், நீதிமன்றம் என நிர்வாகத்துறை இருக்கு. இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றால் பெரிய அளவுக்கு சம்மட்டி அடி விழும். முதலமைச்சருடைய துறையில் இன்னும் டெண்டரே விடல. டெண்டரே விடாத துறையில் ஊழல். சில துறைகளில் வந்து உலக வங்கி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த துறை சம்மந்தமாக கோர்ட்டுக்கு போகும் போது கூட கோர்ட் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கு.
இப்படி கோர்ட் போய் சூடு வாங்கிட்டு வந்தவர்கள் அங்க போக மாட்டாங்க. ஆனால் உப்புக்கு சப்பாக ஒரு ஆள் கிட்ட கொடுக்கிறது ,கொடுத்துட்டு வெளியே வந்ததும் ஒரு பேட்டி கொடுக்கிறது. இதான் முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம். என்ன கட்டம் கட்டம் கட்டம். இவங்க தான் பாக்ஸ் வச்சு, அந்த பாக்ஸ்ல டெண்டர் போடணும். அதுல எல்லா ஊழலும் பண்ணிட்டு, பாக்ஸ் பெட்டி பெட்டியாக வாங்கி அடுக்கி வச்சு, ஆசியாவிலே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக வந்தவுங்க இவுங்க.
இவர்கள் முழுமையாக ஊழலில் திளைத்தவர்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, ஊழலின் ஊற்று கண், ஒட்டுமொத்த ஊழல் பெருச்சாளிகள், ஊழல் பெருச்சாளிகள் திமுக இந்த மாதிரி அடையாளம் உள்ளவர்கள். இன்றைக்கு ஏதோ வந்து ஒரு புதிய அவதாரம் எடுத்தது போல, உத்தம புருஷன் போல புதிய வேடமிட்டு அவதாரம் எடுத்து வந்தால் நிச்சயமாக இதனுடைய பின்விளைவு அவர்களுக்கு தான் போகும் என தெரிவித்தார்.