திமுகவுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தோம், இனி அதிமுக போராட்டம் நடத்தும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம், தமிழகத்தில் திமுக அரசை எதிர்த்து பாஜக மட்டுமே தனித்து போராட்டம் நடத்துகின்றது, எதிர்க்கட்சி அதிமுக எதுவும் செய்யல என்ற கேள்விக்கு, நீங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அரசினுடைய மெத்தனப் போக்கை, அரசு செய்ய முடியாத செயல்களை, நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை, நான் தினந்தோறும் அறிக்கையின் வாயிலாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற அரசுக்கு ஒரு ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து இருக்கிறோம்.
இனிமேல் அந்த கோரிக்கைகள் எல்லாம் மக்களுடைய கோரிக்கையாக இருப்பதனால் நிறைவேற்ற முடியாத சூழலை திமுக ஏற்படுத்துமானால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாத்விக முறையில் ஆர்ப்பாட்டத்தை, போராட்டத்தை, அறப் போராட்டத்தை தொடங்கும். பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் மாநில அரசுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது,
மத்திய அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது என்பது என்னுடைய இரண்டு, மூன்று அறிக்கையின் மூலமாக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். இரண்டு அரசுகளும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சிரமங்களைக் குறைக்க வேண்டும். பொதுவாக டீசல் விலை உயர்வினால் மக்களுடைய அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களுடைய விலை மிக உயர கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்களை பெரிதும் பாதிக்கும் என்ற நிலைகளை எல்லாம் நாங்கள் அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்கிறோம் என தெரிவித்தார்.