திமுக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதன் காரணமாக கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவரது மகனான விஜய பிரபாகரன் மற்றும் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “கட்சியானது முதலில் இருந்தவாறே மிகுந்த எழுச்சியுடன் தான் தற்பொழுதும் செயல்பட்டு வருகிறது.
அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைவருக்கும் மாறி மாறி வரும் நிகழ்வாகும். ஆகவே தேமுதிகவை மீண்டும் எழுச்சியுடன் நிலைநிறுத்துவோம். மேலும் நமது கட்சியானது திமுகவுடன் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பான நலத் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்” என்று கூறியுள்ளார்.