மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் நேரு அதிமுகவும், திமுகவும் அண்ணன்-தம்பி என்று கூறியதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு துரை வைகோ அதிமுக மற்றும் திமுக இரண்டுமே திராவிட கட்சிகள் தான். தமிழகத்தில் மதவாதிகள் வேரூன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைச்சர் நேரு அப்படி கூறியிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார். அதன் பிறகு ராமஜெயம் கொலை வழக்கில் அவர்களுடைய குடும்பத்தினரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என குற்றவாளிகள் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருவதால் அது பற்றி நானோ பொதுமக்களும் கருத்து தெரிவித்தால் சரியான முறையில் இருக்காது என்று கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினர். இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக என்று கூறப்படும் நிலையில், அதில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இணைக்கப்படவில்லை. எனவே 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு என்று சொன்னால் அதை எப்படி பொருந்தும். மேலும் அரசியல் சாசன சட்டப்படி உச்ச நீதிமன்றத்தின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்று கூறினார்.