நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் வேட்பாளர்கள் கட்சி மாறுவது தொடர்கதையாகி உள்ளது.
தேர்தல் வந்தாலே இதுபோன்ற காட்சிகள் மக்களின் நினைவுக்கு வந்துவிடும். அதற்கு காரணம் நிஜத்திலும் அரங்கேறும் கட்சித்தாவல் கலவரங்கள் தான். 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனி ஒருவராக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து திமுக கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர் திமுக மகளிர் அணி அமைப்பாளர் தெய்வநாயகி.
இவரை வீரமங்கை என முதலமைச்சர் ஸ்டாலினே நேரில் அழைத்து ஸ்லாகித்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
நெல்லை மாநகராட்சில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
மறுபக்கம் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி தற்போது குன்னூர் நகராட்சியில் 24வது வார்டான அட்டனை பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும், தற்போது அதிமுக அணி மாவட்ட செயலாளராக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்கிறார் குருமூர்த்தி.
இதேபோல கும்பகோணத்தில் தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது திடீரென அங்கு வந்த மாநகர 18-வது வட்ட திமுக செயலாளர் தளபதி குமரன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை நீலாங்கரையில் நடந்திருப்பது இதற்கெல்லாம் அடுத்த லெவல், அதிமுகவின் மாநில மீனவர் அணி செயலாளராக இருந்தவர் நீலாங்கரை சேர்ந்த எம்.சி.முனுசாமி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவர் அமமுக வில் இணைந்தார். ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் அவர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பியுள்ளார்.
ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.