முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 6 கிலோ தங்கம் ஆகிய பொருட்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருமே அச்ச உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். வெங்கடாசலம் இறப்பில் சந்தேகம் இருந்தால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். திமுக அரசு மீது குற்றச்சாட்டு வரும் போதெல்லாம் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.