நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியார் அதிமுகவை வழிநடத்தி செல்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பொங்கல் பரிசு உயர்த்திக் கொடுக்கப்பட்டது.
ஆனால் திமுக அரசில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். 1000 ரூபாய் பணத்தை கூட முழுமையாக வழங்கவில்லை. கொரோனா காலம் என்பதால் வரிகளை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை உயர்த்துள்ளனர். அதோடு மின்கட்டணத்தையும் 26 சதவீதம் முதல் 52% வரை உயர்த்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காகவே திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் பராமரிப்பு பணிகள் தான் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்று திமுக அரசு கூறுகிறது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது கடந்த 10 வருடமாக தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாதொடு மின் துண்டிப்பும் நடைபெறவில்லை.
திமுக எப்போது ஆட்சியில் அமர்ந்தாலும் கூடவே மின் வெட்டும் வந்துவிடும். அமைச்சர் துரைமுருகன் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றபோது 5 நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவர் கிளம்பி சென்றார். இதேபோன்று தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் இரவு ஆய்வுக்காக சென்ற போது மின்வெட்டு ஏற்பட்டது. திமுக அரசு மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்துள்ளனர். குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் மைக்கில் மட்டும்தான் பேசுகிறார். அவர் ஊரெல்லாம் கஞ்சா, மது, லாட்டரி விற்பனை போன்றவைகள் நடைபெறுகிறது என்கிறார்.
பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் தன்னுடைய லெட்டர் பேடில் பள்ளிபாளையம் பகுதியில் கஞ்சா, லாட்டரி, மது விற்பனை போன்றவைகள் அதிகரித்துள்ளதாக கடிதம் எழுதியுள்ளார். வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். எம்பி ராசா இந்துக்கள் குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு திமுகவினர் யாருமே அவரை கண்டிக்கவில்லை. தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, நகை பறிப்பு போன்றவைகள் அதிகரித்து வருகிறது. ஓபிஎஸ் திமுகவின் கைக்கூலியாக இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்கிறார். அம்மா ஜெயலலிதாவின் ஆத்மாவின் மூலம் அதிமுக கட்சி அலுவலகத்தில் கதவை எட்டி உதைத்தவர்களுக்கும், கடப்பாறையால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்களுக்கும் தண்டனை கிடைத்துள்ளது என்றார்.