Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சியில் தான் மக்கள் பயனடைகிறார்கள்” ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண்போம்….. முதல்வரின் நெகிழ்ச்சி கருத்து….!!!!

சென்னை கொளத்தூரில் உள்ள கௌதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் மறுக்கட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பகுதியில் 111.80 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதோடு மறுக்கட்டுமான திட்ட பணிகளுக்கான ஒதுக்கிட்டு ஆணையை குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு குடிநீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் சார்பில் ரூ. 1.94 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட பணிகள்,‌ 1 கோடியே 95 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் பூங்கா, நூலகங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் முதன்முதலாக அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. அந்த சமயத்தில் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகளாக இருந்தது. இதனால் ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்ட புதிய வீடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசை மாற்று வாரியம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த பெயர் தான் தற்போது நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் திமுக ஆட்சியில் பயன் அடைகிறோம் என்று மகிழ்ச்சியாக இருப்பதால், நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் கனவாக இருக்கும். இந்த கனவை நாங்கள் நிறைவேற்றுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. கௌதம புரத்தில் முன்பு இருந்த 400 வீடுகள் அகற்றப்பட்டு, 840 குடியிருப்புகள் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, குடியிருப்புகள், கல்வி, வேலை வாய்ப்பு, நாட்டுக்கு இனமானம், வாழ்க்கைக்கு தன்மானம்‌ ஆகியவற்றை ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. எங்களுடைய நோக்கம் குடிசையை மாற்றி வீடுகள் கட்ட வேண்டும் என்பது மட்டும் கிடையாது. மக்களுடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஆட்சி தான் திமுக.

இதனால்தான் திராவிட மாடல் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கலைஞரிடம் மு.க ஸ்டாலின் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு அவர் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று சொன்னார். அந்த உழைப்பு என்பது எனக்கு மட்டுமின்றி என்னோடு பணியாற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் இருக்கிறது. எங்களுடைய திராவிட மாடல் அரசு கம்பீரமாக‌ கடமையை செய்து கொண்டிருக்கிறது. இதற்கு பொதுமக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் கொளத்தூருக்கு வந்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில் 3 முறை இங்கே தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

இந்த தொகுதிக்கு வந்தாலே மகிழ்ச்சியும், புத்துணர்வும், எழுச்சியும் வந்து விடுகிறது. தமிழகத்தில் 219 இடங்களில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது.‌ இங்கு 10,295 கோடி மதிப்பீட்டில் 94,557 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த திட்டங்கள் எல்லாமே ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்பதற்காக மட்டும்தான். அறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்று கூறினார். கலைஞர் கருணாநிதி ஏழையின் சிரிப்பில் அறிஞர் அண்ணாவை காண வேண்டும் என்றார். இப்போது நான் ஏழையின் சிரிப்பில் கருணாநிதியின் முகத்தை காண வேண்டும் என்று சொல்கிறேன் என்றார்.

Categories

Tech |