தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொருத்தவரை, சரியான கட்டமைப்பை உருவாக்குவதில் திமுக தவறிவிட்டது என்றும், தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு சரி இல்லை. அதில் திமுக தோல்வி அடைந்துவிட்டது. இரண்டாவது சட்டம் ஒழுங்கை சரி செய்து, நிம்மதியான ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு உரிய ஒரு நிலையை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தவறிவிட்டது. தமிழகம் இன்று போதை மாநிலமாக மாறியுள்ளது.
கஞ்சாவில் இருந்து பல்வேறு போதைப் பொருட்கள் வரை இளைஞர்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர். அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. பட்டப்பகலில் படுகொலைகள், ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்துகொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் எப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது. இது புதிதல்ல. கண்டிப்பாக இந்த நிலைமை திமுக ஆட்சியில் எப்பொழுதுமே உருவாகும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.