நேற்று இரவு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, அவரை மார்ச் 7ஆம் தேதிவரை பூந்தமல்லி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கைதை கண்டிக்கும் விதமாக அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அராஜகத்தையும் வன்முறை வெறியாட்டத்தையும் ஜனநாயகப் படுகொலையும் தட்டிக்கேட்ட கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் அவர்களை திடீரென காவல்துறை கைது செய்து இருப்பது வன்மையாக கண்டிக்கின்றோம்.
திரு ஜெயக்குமார் அவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற மனப்பான்மையோடு கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது எந்த வகையில் முறைகேடான செயல். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் தலைவராகவும், பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், அரசியலில் மிக மூத்த உறுப்பினராக விளங்குகின்ற ஜெயக்குமார் அவர்கள் கள்ள ஓட்டுப் போடுவதை தடுப்பதற்கான முயற்சி எடுத்திருக்கிறார்.
ஒரு இடத்தில் சட்டவிரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்ற ஒரு நபரை பிடித்து அவர் தப்பி ஓடாதபடி காவல்துறையிடம் ஒப்படைப்பதது தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் இதற்கு முன்பு, எத்தனையோ முறைகள் நடைபெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். அதை போல கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும், களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த அங்கிருந்தவர்கள் முற்படுத்தப்பட்ட போது அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்படும் முன்னாள் அமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது நியாயம் தான் என்பதை தமிழ்நாட்டில் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அதில் திமுகவின் முறைகேடும், கள்ள ஓட்டு அராஜகமும், அடாவடியும் நிறைந்த ஒன்று என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டு மிகக்குறைந்த அளவிலே வாக்கு பதிவாகி இருப்பதை மூடிமறைக்கவும், இந்த தேர்தல் மூலமாக தங்களுக்கு அங்கீகாரம் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்றி அமைக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே திரு ஜெயக்குமார் அவர்களை சட்டவிரோதமாக காவல்துறையினர் கொண்டு திமுக அரசு கைது செய்துள்ளது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி மறு தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது, மக்கள் மறந்துவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோத செயலை கைவிடாது இருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக இந்த அராஜகங்களையும், முறைகேடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மேற்கொள்ளும் தாக்குதலையும் சட்டத்தின் துணைகொண்டு கழகம் எதிர்த்து நிற்கும், முறியடிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக காவல்துறையின் உதவியுடன் எந்த அளவுக்கு ஜனநாயக படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாக ஜெயக்குமார் அவர்கள் கைது அமைந்திருக்கிறது. இத்தகைய சலசலப்புகளுக்கு என்றும் அஞ்சுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. ஆகவே நாளை கழக உடன்பிறப்புகள் விழிப்போடு இருந்து தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.