தியாகத்தலைவி சின்னம்மா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார் என்றும், அம்மாவின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7ம் தேதி தமிழகம் வரும் சின்னம்மாவின் வருகைக்காக அமமுகவினர், அம்மாவின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார். கழகத் தொண்டர்கள் ஓசூரிலிருந்து வரவேற்பு அளிக்க தயாராகி வருவதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
சின்னம்மா தமிழகம் வந்தபின், அம்மாவின் நினைவிடத்திற்கு வரக்கூடாது என்பதற்காகவே, பராமரிப்பு பணி என்ற பெயரில் திட்டமிட்டு நினைவிடம் மூடப்படுவதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டார். தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடாது எனக் கூறினார்.
அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி, பொதுச் செயலாளருக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும், சின்னம்மாவே சட்டப்போராட்டம் நடத்தி, அ.தி.மு.க.வை மீட்டெடுப்பார் என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்தார். தி.மு.க. என்ற தீய சக்தி ஆட்சிக்குவர, அம்மாவின் தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என திரு. டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.