Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக என்றால் சும்மா இல்லை… டெல்லிக்கு பதிலடி கொடுத்துளோம்…. மறைமுகமாக சாடிய முக.ஸ்டாலின் …!!

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல தி.மு.க. திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில்,  தி.மு.க நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அ.தி.மு.க அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?

இத்தகைய அடக்குமுறைகளை, எத்தனையோ காலமாகச் சந்தித்துத்தான் தி.மு.கழகம் இன்றும் வலிவுடனும் பொலிவுடனும் மக்களின் பேரியக்கமாகத் திகழ்கிறது. “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கினார் பேரறிஞர் அண்ணா. அதற்காகவே தி.மு.க.வைத் தடை செய்யும் நோக்குடன் 1963-இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சாதுரியமாகத் தனிநாடு கோரிக்கையைக் கழகம் கைவிட்டது.

“பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்பதை ஏற்கத் தக்க வகையில் கழகத்தினருக்கும் மக்களுக்கும் விளக்கினார் அண்ணா. அதன் விளைவு, அடுத்து நடந்த 1967 பொதுத்தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்றாக்கி, டெல்லிக்கு ஏற்ற பதிலடி தந்த அண்ணாவின் இயக்கம் இது.

அந்த அண்ணனின் தம்பியான ஆருயிர்த் தலைவர் கலைஞர், ‘காஞ்சித் தலைவன்’ என்ற படத்தில் ‘வெல்க காஞ்சி.. வெல்க காஞ்சி’ என்ற பாடல் எழுதினார். காஞ்சி என்பது அண்ணா பிறந்த ஊர் என்பதால் அவரைத்தான் அது குறிக்கிறது என்ற குதர்க்கமான அரசியல் காரணத்தை முன்வைத்து, திரைப்படத் தணிக்கைத் துறையினர் அதனை நீக்கச் சொன்னார்கள்; தலைவர் கலைஞர் மறுப்பு தெரிவிக்கவில்லை; ‘வெல்க காஞ்சி’ என்பதை ‘வெல்க நாடு.. வெல்க நாடு’ என்று மாற்றி அமைத்தார். காஞ்சியில் வெற்றி என்றிருந்த பாடல், தணிக்கைத்துறையின் நெருக்கடிக்குப் பிறகு, நாடெங்கும் வெற்றி என்பதாக எதிரொலித்தது.

பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர் தலைவர் கலைஞர். ஓய்வறியா சூரியனாம் கலைஞரிடமிருந்து, உழைப்பைத் தானமாகப் பெற்றிருப்பவன் உங்களில் ஒருவனான நான். அதனால், தடைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், பயந்து ஒதுங்கும் வழக்கம் என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. அண்ணாவும் கலைஞரும் கட்டிக்காத்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் நிலையில் இப்போதும் கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |