2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நேற்று திராவிட மாயை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “கடந்த 2 வருடங்களாக நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்தது என்னவென்றால் திராவிட ஆட்சி ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. 2019 இல் புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் 626 கிராமங்களில் தீண்டாமை உள்ளது. அதிலும் திருவாரூரில் 158 கிராமங்களில் தீண்டாமை அதிகமாக உள்ளது. தமிழக ஜாதி அடிப்படையில் ஆவணக்கொலை குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எந்த நன்மை நடந்தாலும் சம்பந்தமில்லாமல் திமுகவால் தான் நடந்தது என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்
தமிழகத்தில் 1967 முன்பாக அதிக அளவில் சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சி வந்தபிறகு அதிக சாதனைகள் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதையே ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். ஜாதியை மதத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவதை செயலாக வைத்திருக்கிறார்கள். திமுக ஒரு பெரிய வெங்காயம் போன்றது. இது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது. தமிழகத்தில் மக்கள் தற்போது அதிக அளவில் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். அவர்களை ஏமாற்ற முடியாது. மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை கேட்க வேண்டும் என பல காலங்களாக அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வளர்ச்சி காரணமாகவே இப்போது அவர்கள் அதை செய்ய முடியவில்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சியமைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.