நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அதில் உரையாற்றிய சீமான் கூறியதாவது, “மக்களை நம்பித்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆளும் கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில் அது மக்களின் முடிவாக இருக்க வேண்டும் அல்லது சர்வாதிகார போக்காக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது எல்லாம் அந்த காலமாக மாறிவிட்டது.
தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது ஆள்கடத்தல் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் ஆள்கடத்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடத்திச்சென்று மிரட்டுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் சாத்தியமில்லை. ஒரு மாநிலத்தில் திடீரென பிரச்சனை வந்து ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை சாத்தியமாகுமா.? தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்வதை விட்டுவிட்டு இது போன்ற தேவையற்ற முடிவுகளை தேர்தல் ஆணையம் பின்னுக்கு தள்ள வேண்டும். மேற்கு வங்காளத்தை போல தமிழகமும் ஆளுநரால் முடக்கப்படும் எனக்கூறுவது, எடப்பாடி பழனிச்சாமியின் அரசையே தவிர அது சாத்தியம் கிடையாது.
ஒரு மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரு அரசை அவ்வாறெல்லாம் முடக்கம் செய்வது எளிதான காரியமல்ல. அதிமுக ஆட்சி செய்தபோது திமுகவினர் 6 மாதத்தில் ஆட்சிகலையும் எனக்கூறினார்கள். அதையே தற்போது அதிமுகவினர் சொல்கிறார்கள் அவ்வளவுதான். பாஜகவை எதிர்த்து திமுகவினர் குரல் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தில் பாதி பேர் திகார் சிறையில் தான் இருக்க வேண்டும்.!” இவ்வாறு அவர் கூறினார்.