திமுக பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைமை கழக பேச்சாளர் குத்தூஸ் குருசாமி, முன்னாள் மாணவரணி செயலாளர் இள. புகழேந்தி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு என்னவென்றால்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானத்தில் திமுக சார்பில் கடந்த 2013ல் நடந்த பொதுக் கூட்டத்தில் நாங்கள் பேசினோம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் புகழுக்கும், பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாவட்ட அரசு வக்கீல் திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனி நபர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி. இளங்கோவன் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், அரசியல் காரணத்திற்காக வேண்டுமென்றே வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனி நபர் விமர்சனம் தொடர்பான அவதூறு வழக்கை அரசு வக்கீல் தாக்கல் செய்ய முடியாது. அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.