திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, திருநெல்வேலிக்கு வந்த முதல்வரிடம் மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தேன். முதல்வர் அங்கிருந்து கிளம்பிய பிறகு அமைச்சர் மா.
சுப்பிரமணியன் எனக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் நெல்லைக்கு வரும்போது உங்களுடைய கோரிக்கைக்கு உத்தரவு போடுகிறேன் என்று கூறினார்.
ஒரு செயலை செய்கின்ற போது அது எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களை பாராட்ட வேண்டும். அதே போன்றுதான் தற்போது நான் முதல்வரையும், அமைச்சரையும் பாராட்டுகிறேன் என்றார். இந்நிலையில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜக கட்சியில் இருந்தாலும் கூட அவர் கட்சி பணி செய்வதில்லை என்று சமீப காலமாகவே புகார் எழுந்து வருகிறது. அதோடு விரைவில் திமுக கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது எனவும் சிலர் கூறுகின்றனர்.
இதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாகவே முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் பாராட்டி வருகிறார். சமீப காலமாகவே நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தவறாமல் கலந்து கொள்கிறார். அரசியல் நாகரீகத்தோடு கலந்து கொள்வதாக கூறினாலும் திமுக கட்சியை பற்றியு,ம் முதல்வர் ஸ்டாலினை பற்றியும் புகழ்வதை தவறாமல் வைத்துக் கொள்கிறார்.
பாஜக கட்சியினர் திமுக கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு ஆதரவாக பேசுவது பாஜகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மருத்துவமனை தொடர்பான கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்ததால், கூடிய விரைவில் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைவார் என்று தகவல்கள் பரவுகிறது.