மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும், அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.
மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? அரசு இதுவரை நடவடிக்கையை முறையாக எடுக்கவில்லை. கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை வெளியிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் கொரோனவை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும்.
குறைபாடுள்ள மற்றும் மறைக்கப்பட்ட விவரங்களால் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட வாரியாக இருக்கும் படுக்கை வசதிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில், அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, கொரோனா குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளிப்படைத்தன்மையுடன் தினமும் வெளியிட்டு வருகிறது. எந்த தகவலையும் மறைப்பதில்லை. மனுதாரர் எதிர்க்கட்சி என்பதால் தமிழக அரசு மீது வீண் பழி சுமத்துகிறார் என்று வாதிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மூன்று வாரத்திற்குள் அரசு விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.