தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கை விரைவில் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு வருகின்ற பத்தாம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்தச் செய்தி திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டு இருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, “திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து தெர்மல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு காட்சி நேரங்களுக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளி அளிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் திரையரங்கு மற்றும் அதன் வளாகம் முழுவதையும் கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கிடையாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.