தியேட்டர் ஊழியர்களை தாக்கிய 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வரும் ராஜாராம்(55) என்பவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜாராம் மற்றும் சில ஊழியர்கள் தியேட்டரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொது அங்கு வந்த பெரியகுளத்தை சேர்ந்த மனோஜ், குணா உள்பட 5 பேர் படம் பார்ப்பதற்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தியேட்டர் ஊழியர்களான ராஜாராம், கருப்பசாமி, பாண்டியராஜன், வினித் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போடி அணைக்கரைப்பட்டி காவல்துறையினர் மனோஜ், குணா, போடியை சேர்ந்த கார்த்திக், சுபாஷ், சந்தோஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.