திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னம்பட்டியில் சிக்கணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வீரதிம்மு என்ற மகள் உள்ளார். வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சிக்கணன் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சிக்கணன், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 12-ஆம் தேதி தியேட்டரில் படம் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் சிக்கணன், அவருடைய மனைவி மல்லிகா, குழந்தை வீரதிம்மு ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சிக்கணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மல்லிகா, வீரதிம்மு ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மல்லிகா பரிதாபமாக இறந்துவிட்டார். குழந்தை வீரதிம்முவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த அப்துல்கலாம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.