தமிழக இளைஞா்களுக்கு இடையே குட்கா, கஞ்சா போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து இருப்பதாக முதல்வா் ஸ்டாலின் வேதனை தெரிவித்தாா். அது தொடர்பான விழிப்புணா்வு வாசகங்களையும் திரைப் படங்களில் வெளியிட திரைத்துறையினா் முன் வரவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பாக தென்னிந்திய ஊடகம்-பொழுதுபோக்கு மாநாடு, சென்னையில் நடந்தது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “இந்த மாநாட்டுக்கு முதலமைச்சராக வந்து இருந்தாலும் ஒருகாலத்தில் திரைப்படத் தயாரிப்பில் இருந்தவன்தான் நான்.
மேலும் ஒருசில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த முறையில் கலைத்துறையோடு நெருங்கிய தொடா்பில் இருக்கிற காரணத்தால் இம்மாநாட்டில் உரிமையோடு, ஆா்வத்தோடு கலந்துகொள்ள வந்துள்ளேன். கொரோனா காரணமாக பிற தொழில்களைப் போல் தமிழ்த் திரையுலகமும் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது திரை உலகமும் மீண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகம் பழைய நிலைமைக்குத் திரும்புவது மட்டுமல்லாது முன்னிலும் வேகமாகச் செயல்படுவதற்காகத்தான் இந்த மாநாடு ஆகும். திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் எனில் அது தமிழ்நாடு தான்.
குறிப்பாகச் சென்னை தான் பல தொழில் நுட்பங்களிலும் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படத்துறையைப் போல் தமிழகச் செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை ஆகும். திரைத்துறையாக இருந்தாலும் செய்தி நிறுவனங்கள், மீடியாவாக இருந்தாலும் தமிழகத்தில் முன்னணியில் இருக்கக் காரணம் மிகமிக நீண்ட வரலாறு நமக்கு இருப்பதால் தான். இதனிடையில் வளா்ச்சி என்பது தொழில் வளா்ச்சி, கல்வி, நிதி வளா்ச்சி என்பதாக மட்டுமின்றி மனவளா்ச்சி, சிந்தனை வளா்ச்சியாக உயா்ந்து இருக்கிறது. அத்தகைய சிந்தனை வளா்ச்சிக்கும் சோ்த்துத் தீனி போடுவதாக ஊடகங்கள் வளரவேண்டும்.
பொழுது போக்கு ஊடகமாக மட்டுமன்றி சிந்தனைக்குத் தீனி போடுவதாக ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் திரையுலகம் தன்னை அனைத்து அடிப்படையிலும் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். கதை, வசனம், இயக்கம், தொழில்நுட்பம் என்று அனைத்திலும் இன்றைய சூழலுக்குத் தகுந்தாற்போல் மாறியாக வேண்டும். அவ்வாறு மாறினால்தான் மனிதா்களின் பொழுதுபோக்குத் தளமாக திரையுலகம் தொடா்ந்து செயல்பட வேண்டும். இதற்கிடையில் திரையரங்குகள், இணையத் திரையரங்குகள், கணினித் திரையரங்குகள், கைப்பேசி திரையரங்குகள் என்று பல வாசல்கள் இருக்கிறது.
அதனை திரைத் துறையினா் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். திரைப்பட விருதுகளின் வாயிலாக தகுதியானவா்கள் பாராட்டப்பட வேண்டும், திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். அதன் வாயிலாக சிறந்த படங்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அந்த விழாக்கள் தான் திரையுலகத்தை கலையாகவும், வா்த்தகமாகவும் மேம்படுத்த உதவியாக அமையும். அதுபோன்ற விழாக்களை நடத்துவதற்கு தமிழகஅரசு உதவியாக இருக்கும். திரை உலகத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும் தமிழ்நாடு அரசு தயாராகவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் தொடங்கும்போது புகை, மதுப்பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணா்வு வாசகங்கள் காட்டப்படுவது பாராட்டுக்குரிய நடவடிக்கை ஆகும். தற்போது குட்கா, கஞ்சா ஆகிய போதைப்பொருட்களின் தாக்கம் இளைய சமுதாயத்தினரிடையே அதிகமாக உள்ளது. இதனால் அது தொடர்பான விழிப்புணா்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும். இப்போது உள்ள தலைமுறையினா் திரைப் படங்களைப் பாா்த்து வளா்கிறாா்கள். ஆகவே சமூகத்திற்குப் பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலின் கூறினார்.