முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் கூறியதாவது, “என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை தான் உங்களில் ஒருவன் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நான் பிறந்தது முதலே அரசியல்வாதியாக தான் வளர்ந்தேன். கல்லூரியில் படித்த போது நாடகம் போட்டது, திருமணமானது, திருமணமான 5 மாதங்களில் சிறை சென்றது எல்லாமே இந்த புத்தகத்தில் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கையின் எல்லா திருப்பங்களையும் 23 வயதுக்குள்ளேயே கண்டவன் நான்.
எப்போதும் நான் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன் என்பதை கூறுவதற்காகவே இந்த புத்தகத்திற்கு உங்களில் ஒருவன் என பெயரிட்டேன். தமிழகம், கூட்டாட்சி தத்துவம் பற்றிப் பேசும் ராகுல் காந்திக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றிகள். மாநில உரிமைகளை மீட்க நாம் ஒன்றிணைய வேண்டும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை அனைவரும் பாடுபட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.