தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருக்குறளில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு ஒரு குடும்பத்தினர் அசத்தி வருகின்றனர். அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பல்மருத்துவர். இவர் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ராஜவேல், மணிவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜவேலு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 25ஆம் தேதி கோவில்பட்டி அருகே உள்ள ஜோதிலட்சுமி என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழ் எல்லோருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று யோசித்த குடும்பத்தினர் உலகப் பொதுமறை திருக்குறளை விளக்க உரையுடன் திருமண அழைப்பிதழை இணைத்து புத்தக வடிவில் வழங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் தாய் வாழ்த்து அனைவரின் இல்லங்களிலும் சென்று சேரவேண்டும் என்பதற்காக திருமண தாம்பூல பையில் தமிழ் தாய் வாழ்த்து இடம் பெறும் வகையில் தயார் செய்து வழங்கி வருகின்றன.
புத்தகத்தின் முதல் பக்கத்தில் மணமகன் பெயர், மணமகள் பெயர், திருமணம் நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து திருக்குறள் மற்றும் விளக்க உரை புத்தகமும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 1500 திருமண அழைப்பிதழ்களை இதுபோன்று தயார் செய்துள்ளனர். இந்தப் புத்தக வடிவிலான திருமண அழைப்பிதலுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தாம்பூலம் மஞ்சள் பையில் ஒரு புறம் மணமகள் பெயரும் மறுபக்கம் தமிழ்தாய் வாழ்த்தும் அச்சிடப்பட்டுள்ளது.
அதில் திருமண அழைப்பிதழ் தமிழ்தாய் வாழ்த்துடன் கூடிய மஞ்சள் பை மட்டுமல்லாமல், பனைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பனையில் தயாரிக்கப்பட்ட சில்லுக்கருப்பட்டியையும் இணைத்து தங்களது உறவினர்களுக்கு அவர்கள் வழங்கி வருகின்றனர். இவர்களின் புது முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.