திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டமானது, மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் பிறகு இதில் பேசப்பட்டதாவது, திருச்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலான, தார் சாலை அமைக்கும் தீர்மானம் ஒன்று போடப்பட்டது.
அதாவது பஞ்சப்பூர் முதல் கரூர் பைபாஸ் வரையில், உய்யக்கொண்டான் கால்வாய் கிழக்கு கரையில், சுமார் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டிலான தார் சாலை அமைக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ரூ.3.84 கோடி மதிப்பீட்டில், சமுதாய கழிப்பிடங்கள் அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ரூ.92 லட்சம் மதிப்பில் கொட்டப்பட்டு முதல் வெங்கடேஸ்வரா நகர் வரையில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவது மற்றும் கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைப்பு பணிகளானது மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனை போல், மாநகராட்சி சாலை வளைவுகளில், 120 வாட்ஸ் எல்இடி மின் விளக்குகளுக்கு பதில், மாநகரினை அழகுபடுத்தும் வகையிலான, 150 வாட்ஸ் ஹெரிடேஜ் எல்இடி மின்விளக்குகள் பொருத்துவது போன்ற 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.